ECONOMYSELANGOR

மோரிப் தொகுதியின் பொது உபசரிப்பு வட்டார மக்களின் பொருளாதார உயர்வுக்கு துணை புரியும்

ஷா ஆலம், மே 11- மோரிப் தொகுதி ஏற்பாடு செய்துள்ள நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு தொகுதியிலுள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் அதேவேளையில் வட்டார மக்களின் பொருளாதார உயர்வுக்கும் துணை புரியும்.

இம்மாதம் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும்  அந்த பொது உபசரிப்பு நிகழ்வுக்கு தேவையான உணவுப் பண்டங்களை வட்டார மக்களிடமிருந்து தாங்கள் வாங்கவுள்ளதாக என்று தொகுதி உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடின் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பின்னர் வருமானப் பாதிப்பை பெரிதும் எதிர்நோக்கியுள்ள வட்டார மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவி புரியும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.

கடந்த ஈராண்டுகளாக நடமாட்டக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருந்த நிலையில் இவ்வாண்டுதான் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்த நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் சுமார் 2,000 பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

இந்த பொது உபசரிப்பில் கலைநிகழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கு போன்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஸ்ரீசெத்தியா தொகுதி நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு சுபாங் ஜெயா, பிஜேஎஸ் 8, மெந்தாரி பிஸ்னஸ் பார்க்கில் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சிலாங்கூர் மகளிர் ஆக்கத்திறன் அமைப்பு, சிலாங்கூர் இளைஞர் இயக்கம் மற்றும் இந்திய சமூகத் தலைவர்களின் பங்கேற்பில் 10 உணவு அங்காடிக் கடைகள் அமைக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

அன்றைய தினம் மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் சுமார் 2,000 பேர் வருகை புரிவர் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :