ECONOMYHEALTHNATIONAL

முகக்கவரி அணிவதை கைவிடவில்லை- சிலாங்கூர் மக்களிடையே நோய்த் தொற்றுக்கு எதிராக அதிக விழிப்புணர்வு

ஷா ஆலம், மே 11- கடந்த மே மாதம் முதல் தேதி தொடங்கி சீரான செயலாக்க நடைமுறைகளில் (எஸ்.ஒ.பி.) பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான சிலாங்கூர் மாநில மக்களின் விழிப்புணர்வு இன்னும் உயர்ந்த பட்ச நிலையிலேயே உள்ளது.

பொது இடங்களில் பெரும்பாலோர் முகக் கவசம் அணிந்திருப்பதே இந்த விழிப்புணர்வுக்கு சான்றாக விளங்குவதாக பொது சுகாதார ஆலோசனை மன்றத்தின் செயல்குழு உறுப்பினர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.

பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமல்ல என்ற போதிலும் பெரும்பாலானோர் பாதுகாப்பு கருதி அதனை அணிந்திருப்பதை காண முடிகிறது.

பெரியவர்கள் மட்டுமின்றி சிறார்கள் மத்தியில் முகக் கவசம் அணியும் பழக்கம் அதிகமாகவே உள்ளது. இது மகிழ்ச்சியளிக்கும் ஒரு விஷயமாகும் என்றார் அவர்.

மீடியா சிலாங்கூர் வாயிலாக ஒளிபரப்பப்பட்ட எஸ்.ஒ.பி. விதிமீறல், சுய பாதுகாப்பு என்பது மீதான விவாத நிகழ்வில் கலந்து கொண்ட போது மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார நிபுணருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் நோய்த் தொற்று பரவல் குறித்து கருத்துரைத்த அவர், அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ள காரணத்தால் இம்மாநிலம் எல்லா விஷயங்களிலும் முன்னிலை வகிக்கிறது என்றார்.

தேசிய அளவில் எது நடந்தாலும் சிலாங்கூரில் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மாநிலத்தில் அதிகமானோர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதால் இங்கு நிலைமை சிறப்பானதாக உள்ளது என்றார் அவர்.

மே மாதம் முதல் தேதி தொடங்கி கட்டிடங்களுக்கு வெளியே முகக் கவசம் அணிவது கட்டாயமல்ல என்று சுகாதார அமைச்சு கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அறிவித்திருந்தது.


Pengarang :