ECONOMYNATIONAL

உள்ளூர் சாலை விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை- வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை

பாடாங் பெசார், மே 11- உள்ளூர் போக்குவரத்து  விதிகளை மீறும் வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெர்லிஸ் மாநில சாலை போக்குவரத்து இலாகா எச்சரித்துள்ளது.

மலேசிய-தாய்லாந்து எல்லை திறக்கப்பட்டது முதல் வாங் கெலியான் மற்றும் பாடாங் பெசார் நுழைவுச் சாவடி வழியாக நாட்டிற்குள் வரும் வாகனங்கள் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்கின்றனவா என்பதை தாங்கள்  கண்காணித்து வருவதாக மாநில ஜே.பி.ஜே. இயக்குநர் ஃபாத்திமா முகமது அலி பியா கூறினார்.

வாங் கிலியான் எல்லை கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதியும் பாடாங் பெசார் எல்லை கடந்த மே 5 ஆம் தேதியும் திறக்கப்பட்டன.

மலேசியா அல்லது தாய்லாந்து வாகனமோட்டிகள் என்ற பேதமின்றி சாலை விதிகளை மீறும் அனைத்து வாகனமோட்டிகளுக்கு எதிராகவும் அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமது துறை எடுக்கும் என்று ஃபாத்திமா சொன்னார்.

நாட்டிற்குள் தங்கள் வாகனங்களைக் கொண்டு வரும் அந்நிய வாகனமோட்டிகள் ஐ.சி.பி. எனப்படும் அனைத்துலக சுழல் அனுமதி மற்றும் காப்புறுதி ஆகியவற்றைப் பெற்றிருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :