ECONOMYNATIONALSELANGOR

நெல்லுக்கான உச்ச வரம்பு விலையை உயர்த்துவீர்- சபாக் பெர்ணம் விவசாயிகள் கோரிக்கை

சிகிஞ்சான், மே 11- தற்போது டன் ஒன்றுக்கு 1,200 வெள்ளியாக இருக்கும் நெல்லுக்கான உச்சவரம்பு விலையை 1,400 வெள்ளியாக உயர்த்தும்படி விவசாய அமைச்சை சபாக் பெர்ணம் வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 8,000 விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நெல்லுக்கான இடுபொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள உச்சவரம்பு விலை அதனை ஈடுசெய்வதற்கு போதுமானதாக இல்லை என்று சிகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுயி லிம் கூறினார்.

உரம் அசல் விலையை விட தற்போது 150 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது. இந்த விலையேற்றத்திற்கு கோவிட்-19 பெருந்தொற்று காரணம் எனக் கூறப்படுகிறது. ஆயினும் நெல்லுக்கான விலை மட்டும் உயர்வு காணாமல் பழைய நிலையிலே உள்ளது என அவர் சொன்னார்.

மேலும், 18 ஹெக்டருக்கு மேல் உள்ளவர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் ஈர நெல்லுக்கான அளவு 17 விழுக்காடாக நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று மாநில சட்டமன்ற சபாநாயகருமான அவர் வலியுறுத்தினார்.

சில நெல் ஆலை உரிமையாளர்கள் ஈர நெல்லுக்கு 20 முதல் 30 விழுக்காடு வரை பிடித்தம் செய்கின்றனர். இதனால் விவசாயிகளின் வருமானம் மாதம் 1,000 வெள்ளி என்ற அளவில் மட்டுமே உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது 360 வெள்ளியாக இருக்கும் உரத்திற்கான  மாதாந்திர உதவித் தொகை 500 வெள்ளியாக உயர்த்தப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக லிம் குறிப்பிட்டார்.

நெல் தவிர்த்து வேறு வேளாண் பொருள்களை பயிரிட அனுமதிக்காத காரணத்தால் நெல் விவசாயிகளின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :