ECONOMYNATIONAL

உற்பத்திச் செலவினம் அதிகரிப்பினால் நெல்லின் தரம் பாதிக்கும்- விவசாயிகள் அச்சம்

சிகிஞ்சான், மே 12- உற்பத்திச் செலவின அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள பொருளாரச் சுமையைச் சமாளிப்பதற்கு நெல்லின் விலை டன் ஒன்றுக்கு 1,400 வெள்ளியாக உயர்த்தப்பட வேண்டும் என்று சபாக் பெர்ணம் வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உரம் மற்றும் களைக்கொல்லி மருந்தின் விலை 150 விழுக்காடு உயர்ந்துள்ள நிலையில் அரசாங்கம் தற்போது வழங்கி வரும் டன் ஒன்றுக்கு 1,200 வெள்ளி என்ற விலை கட்டுப்படியாகாது என்று நெல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவரான புவா யான் தாட் (வயது 62) கூறினார்.

இதர கட்டுப்படுத்தப்பட்ட பொருள்களின் விலை உயர்வு கண்ட போதிலும் நெல் விலை மட்டும் பல ஆண்டுகளாக உயர்வு காணாது அதே நிலையில் உள்ளது என்று அவர் சொன்னார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நெல் விலை டன் ஒன்றுக்கு 1,500 வெள்ளி வரை உயர்வு கண்டது. இப்போது மட்டும்  ஏன் விலை உயர்வு காணவில்லை? இதன் காரணமாக நாங்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம் என்றார் அவர்.

நெல் விலை உயர்வு காணாவிட்டால் நெல் உற்பத்தி தரமும் பாதிக்கப்படுவதற்குரிய ஆபத்து உள்ளதாக ஹைருள் நிஸாம் சம்சுரி (வயது 49) கூறினார்.

உரம் மற்றும் களைக்கொல்லி மருந்தின் விலை தொடர்ந்து உயர்வு கண்டால் உரம் மற்றும் களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்துவதை நாங்கள் குறைக்க வேண்டி வரும் இதனால் விளைபொருளின் தரமும் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அரசாங்கம் வழங்கி வரும் விதை நெல் மற்றும் உரம் போன்றவை உற்பத்தி செலவினத்தை குறைக்க உதவினாலும் வேளாண் தொழிலை தொடர்ந்து நடத்த அது போதுமானதாக இல்லை என்று முகமது அஸ்ரி பட்ருன் (வயது 60) கூறினார்.


Pengarang :