ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரில் 6,748 பேர் கை,கால்,வாய்ப் புண் நோயினால் பாதிப்பு

ஷா ஆலம், மே 13– இம்மாதம் 7 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சிலாங்கூர் மாநில முழுவதும் கை,கால்,வாய்ப் புண் நோய் எண்ணிக்கை அபாயக் கட்டத்தைத் தாண்டி 6,748 சம்பவங்களாக பதிவாகியுள்ளது.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் நான்கு விழுக்காட்டினர் தொடர் கண்காணிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் எஞ்சியோர் வெளி நோயாளிகளாக சிகிச்சையளிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகாடிமான் கூறினார்.

இம்மாநிலத்தில் இதுவரை இந்நோய் தொடர்புடைய 118 தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 95 விழுக்காடு பாலர் பள்ளிகள் மற்றும் தினசரி பராமரிப்பு மையங்களை உட்படுத்தியிருந்தன என்ற அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்நோய் இவ்வாண்டு தொடக்கம் முதல் தீவிரமாக பரவி வரும் இந்நோய்க்கு ஏழு வயதுக்கும் குறைவான சிறார்களே அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

இவ்வாண்டின் மே 1 முதல் 7 வரையிலான 18 வது நோய்த் தொற்று வாரத்தில் 525 நோய் சம்பவங்கள் பதிவாகின. எனினும், அதற்கு முந்தைய நோய்த் தொற்று வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 40 விழுக்காடு குறைவாகும் என்றார் அவர்.

அக்காலக்கட்டத்தில் நோயின் தாக்கம் குறைவாக இருந்ததற்கு நோன்புப் பெருநாள் விடுமுறை காரணமாக இருந்திருக்கலாம் என நம்புகிறோம். ஏனென்றால் அப்போது பள்ளிகள், சிறார் பராமரிப்பு மையங்கள் போன்றவை மூடப்பட்டிருந்தன என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :