ECONOMYHEALTHNATIONAL

சிலாங்கூரில் 9,357 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவு 

ஷா ஆலம், மே 13- சிலாங்கூரில் இதுவரை 9,357 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹாரி ஙகாடிமான் கூறினார்.

கடந்தாண்டின் இதே நோய்த் தொற்று வாரத்துடன் ஒப்பிடுகையில் இது 70 விழுக்காடு அல்லது 3,854 சம்பவங்கள் அதிகமாகும் என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டில் இதுவரை டிங்கி நோயினால் ஒரு மரணச் சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்தாண்டின் இதே காலக்கட்டத்திலும் இந்த எண்ணிக்கைதான் பதிவானது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

கடந்த மே 1 முதல் 7 வரையிலான 18 வது நோய்த் தொற்று வாரத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் 470 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகின. அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான 656 சம்பவங்களைக் காட்டிலும் இது 28.4 விழுக்காடு குறைவாகும் என்றார் அவர்.

வாரம் பத்து நிமிடத்தை செலவிட்டு வீட்டின் சுற்றுப்புறங்களில் உள்ள கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தம் செய்வதன் மூலம் ஏடிஸ் கொசு பரவலை தடுக்க உதவும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

 

 


Pengarang :