ECONOMYHEALTHNATIONAL

28 விழுக்காட்டு சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், மே 13– “பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 993,652 பேர் அல்லது 28 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மேலும் 45 விழுக்காட்டுச் சிறார்கள் அல்லது 15 லட்சத்து 96 ஆயிரத்து 416 பேர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நாட்டிலுள்ள பெரியவர்களில் 1 கோடியே 60 லட்சத்து 57 ஆயிரத்து 632 பேர் அல்லது 68.2 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மேலும், 2 கோடியே 29 லட்சத்து 70 ஆயிரத்து 424 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்ற வேளையில் 98.8 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 32 லட்சத்து 45 ஆயிரத்து 673 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 93.3 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 1 ஆயிரத்து 725 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர். மேலும், 96.4 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 99 ஆயிரத்து 490 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நேற்று நாடு முழுவதும் 37,536 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 16,994  பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 16,459 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 4,083 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 7 கோடியே 5 லட்சத்து 51 ஆயிரத்து 572 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நாட்டில் நேற்று கோவிட்-19 தொடர்புடைய 4 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.


Pengarang :