ECONOMYSELANGOR

சிலாங்கூர் அரசின் “கார்னிவெல் கெர்ஜாயா மெகா“ திட்டத்தின் வழி 20,000 வேலை வாய்ப்புகள் 

ஷா ஆலம், மே 13– சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் “கார்னிவெல் கெர்ஜாயா மெகா“ எனும் மாபெரும் வேலை வாய்ப்பு கண்காட்சி வரும் ஜூன் மாதம் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் ஷா ஆலம் மாநகர் மன்ற மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதாக இளம் தலைமுறையினர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

பொது மக்களின் நேரடி பங்கேற்புடன் நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்கும் சுமார் 100 நிறுவனங்கள் சேவை, உற்பத்தி, மின்னியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்குவதாக அவர்  சொன்னார்.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் மாநிலத்தில் வேலையின்மைப்  பிரச்னை 3.2 விழுக்காடாக பதிவாகியுள்ளது. இவ்விவகாரத்தை நாங்கள் கடுமையாக கருதுகிறோம். இந்த எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம் என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக தடைபட்டிருந்த இந்த கண்காட்சி இம்முறை பொது மக்களின் நேரடி பங்கேற்புடன் பெரிய அளவில் நடத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் கும்புலான் பெராங்சாங் சிலாங்கூர், டைகின் மலேசியா சென்.பெர்ஹாட், டி.எச்.எல். எக்ஸ்பிரஸ், டி.ஆர்.பி. ஐக்கோம், ஐயண்ட் மலேசியா, மலேயன் பேங்கிங் பெர்ஹாட் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :