ECONOMYNATIONAL

கெஅடிலானை வலுப்படுத்த கட்சித் தேர்தல் துணை புரியும்- செலாயாங் தொகுதித் தலைவர் கான் கூறுகிறார்

கோம்பாக், மே 16- நாட்டில் 15வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்  கெஅடிலான் கட்சியை வலுப்படுத்துவதற்கு  தற்போது நடைபெறும் கட்சித்  தேர்தல் துணை புரியும் என்று அக்கட்சியின் செலாயாங் தொகுதி தலைவர் கான் பெய் நீய் கூறினார்.

விரைவில் நடைபெறவிருக்கும் 15வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏதுவாக உறுப்பினர்களை ஒன்றுபடுத்துவதற்கும் தொகுதி தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த தேர்தல் முக்கிய பங்கினை ஆற்றும் என்று அவர் சொன்னார்.

கட்சி உறுப்பினர்களை உட்படுத்திய இந்த தேர்தல் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கு மிக முக்கியமானதாகும். உறுப்பினர்களின் நலனைக் காப்பது, கட்சியின் முதுகெலும்பாக விளங்கும் கிளைகள் மற்றும் தொகுதிகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட மூன்று தொலைநோக்குத் திட்டங்களை நாம் கொண்டுள்ளோம் என்றார் அவர்.

இது தவிர மகளிர் முன்னோக்கிச் செல்வதை உறுதி செய்வதையும் நாம் இலக்காக கொண்டுள்ளோம். இளையோரை குறிப்பாக புதிய வாக்காளர்களைக் கவர்வதில் முக்கிய பங்காற்றும் பிரிவினராக மகளிர்ப் பிரிவினர் உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றிரவு இங்கு நடைபெற்ற செலாயாங் தொகுதியின் மாபெரும் பேரணியில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதிக எண்ணிக்கையில் திரண்டு வாக்களிப்பதன் மூலம் ஆற்றல்மிக்க மற்றும் மக்களுக்குச் சேவையாற்றக் கூடிய தலைவர்களின் வெற்றியை உறுதி செய்யுமாறு கட்சி உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

செலாயாங் தொகுதிக்கான 2022/2025 ஆண்டிற்கான கெஅடிலான் தேர்தலில் கான் பெய் நீயை எதிர்த்து செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் ஜி கீன் களம் காண்கிறார்.


Pengarang :