ECONOMY

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பெண்ணின் உடல் உறுப்புகள் கண்டுபிடிப்பு

ஈப்போ, மே 16– இங்குள்ள சிம்பாங் பூலாய், சுக்கு மலையில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படும் இரு பெண்  மலையேறிகளில் ஒருவரின் உடல் உறுப்புகளை மீட்புக் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.

அந்த உடலுறுப்புகள் இன்று காலை 10.20 மணியளவில் மரக்குவியலுக்கு மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி நடவடிக்கை இயக்குநர் முகமது ஷரிசால் அரிஸ் கூறினார்.

அடையாளம் தெரியாத நபரின் உடல் பாகங்களை நாங்கள் கண்டுபிடித்து சவப் பரிசோதனைக்காக ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனோன் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம் என்று அவர் சொன்னார்.

அந்த உடல் பாகங்கள் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு மனிதக் கால் நேற்று மாலை மேல் பகுதியில் அதாவது நீர்வீழ்ச்சிப்  பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்ட வேளையில் உடல் பாகங்கள் மலையடிவாரத்தில் மீட்கப்பட்டன என்றார் அவர்.

அப்பகுதியில் நிலவும் வானிலையைப் பொறுத்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் இன்று மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மலையேறும் பணியில் ஈடுபட்டிருந்த போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி சீ சூ யேன் (வயது 32) மற்றும் இங் யீ சியு (வயது 46) ஆகிய இருவரும் காணாமல் போனதாக காவல் துறையினர் நேற்று கூறியிருந்தனர்.


Pengarang :