ECONOMYSELANGOR

மக்களுக்கு உதவுவதற்காக மேம்பாட்டு இலக்கை மாநில அரசு சீரமைக்கிறது

கோம்பாக், மே 17- விரைவில் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள சிலாங்கூர் சத்து எனப்படும் முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் வாயிலாக  பல்வேறு துறைகளை உள்ளடக்கிய புதிய மேம்பாட்டு இலக்கை சிலாங்கூர் அரசு சீரமைத்து வருகிறது.

மாநிலத்தின் மேம்பாடு தொழிலியல், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளை மட்டும் சார்ந்திராமல் சவால்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவும் வகையில் கூடுதல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதையும் இலக்காக கொண்டிருக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பொருளாதார  திரட்டு தொடங்கி வரும் 2025 இல் சிலாங்கூரை விவேக மாநிலமாக்கும் இலக்கு வரையிலான அனைத்து திட்டங்களும் மறுசீரமைப்பு செய்யப்படும் என்பதோடு இப்பணி இந்த ஆட்சியின் இறுதி தவணைக்குள் முழுமை பெறும் என்று அவர் சொன்னார்.
கோம்பாக், தாமான் மெலாவத்தியில் நேற்றிரவு நடைபெற்ற நோன்பு  பெருநாள் பொது உபசரிப்பில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

சமூக பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட முதலாவது சிலாங்கூர் திட்டம் வரும் ஜூலை மாதம் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மந்திரி புசார் இம்மாதம் 8 ஆம் தேதி கூறியிருந்தார்.

மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய பெருந்தொற்றைக் கையாண்டதன் வழி கிடைத்த அனுபவத்தை அடிப்படையாக கொண்டு இந்த விரிவான ஐந்தாண்டுத் திட்டம் வரையப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.


Pengarang :