ECONOMYSELANGOR

கெஅடிலான் தேர்தல்- சச்சரவுகளை தவிர்த்து ஆரோக்கியமான முறையில் பிரசாரம் செய்வீர்- அமிருடின் வலியுறுத்து

உலு லங்காட், மே 17– கெஅடிலான் தேர்தலின் போது ஆரோக்கியமான முறையில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து கட்சி உறுப்பினர்களையும் சிலாங்கூர் மாநில கெஅடிலான்  தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரத்தின் போது சச்சரவுகளில் ஈடுபடுவதையும் ஒருவரை ஒருவர் வீழ்த்த முற்படுவதையும் தவிர்க்க வேண்டும் என கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அவர் அறிவுறுத்தினார்.

பகைமையை வளர்ப்பதற்கோ ஒருவரை ஒருவர் வீழ்த்துவதற்கோ இது தருணமல்ல. ஆரோக்கியமான முறையில் போட்டியிட்டு சிறப்பான முறையில் வெற்றி காணுங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

உலு லங்காட் கெஅடிலான் தொகுதியின் நோன்புப் பெருநாள் உபசரிப்பு மற்றும் பெக்கான் செமினி கெஅடிலான் தொகுதியின் பேரணி  நிகழ்வுகளில் கலந்து  கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஷெராட்டோன் நகர்வின்  வழி  கெஅடிலான் பெரும் துரோகத்தை எதிர்நோக்கியப் பின்னர் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் அனைத்து உறுப்பினர்களும் முனைப்புடன் ஈடுபட வேண்டும் என சிலாங்கூர் மந்திரி புசாருமான அவர் சொன்னார்.

இது நாம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்னையல்ல. இது மக்களையும் உள்ளடக்கியுள்ளது. அவர்களை பாதுகாப்பதற்கும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்குமான திட்டத்தை நாம் தொடர வேண்டியுள்ளது என்றார் அவர்.


Pengarang :