ANTARABANGSAECONOMY

இரண்டு மாதங்களுக்கு கடுமையான சூழலை எதிர் கொள்ளத் தயாராவீர்- இலங்கை மக்களுக்கு ரணில் வலியுறுத்து

புது டில்லி, மே 17- அடுத்த இரு மாதங்களுக்கு கடுமையான சூழலை எதிர் கொள்ளத் தயாராக இருக்கும்படி இலங்கை மக்களை புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய கடுமையான தொனியிலான அந்த உரையில் இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் 750 கோடி அமெரிக்க டாலராக இருந்த அந்நியச் செலாவணி கையிருப்புடன் ஒப்பிடுகையில் 10 லட்சம் அமெரிக்க டாலரைத்  தேடுவது கருவூலத்திற்கு தற்போது பெரும் சவாலாக உள்ளது என்று அவர் கூறினார்.

எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு 50 லட்சம்  அமெரிக்க டாலரை திரட்டுவது நிதியமைச்சுக்கு கடினமானப் பணியாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், மருந்து மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக அண்மைய சில வாரங்களாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்க இன்னும் சில தினங்களில் நாம் 7 கோடியே 50 லட்சம் வெள்ளியைத் திரட்டியாக வேண்டும். பெட்ரோல் கையிருப்பும் ஒரு தினத்திற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்று ரணில் தனதுரையில் கூறினார்.

இருதய நோய்க்கான மருந்துகள், அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் உள்பட பல மருந்துப் பொருள்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான கட்டணம் பல மாதங்களாகச் செலுத்தப்படவில்லை. இவற்றுக்கு செலுத்த வேண்டிய தொகை மட்டும் 3,400 கோடி இலங்கை ரூபாயாகும் என்றார் அவர்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்கு பண நோட்டுகளை அச்சடிப்பது, இழப்பை எதிர்நோக்கியுள்ள  ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்குவது, புதிதாக  மாற்று வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்வது போன்ற திட்டங்களை ரணில் அறிவித்துள்ளார்.


Pengarang :