ECONOMYNATIONAL

கெஅடிலான் தேர்தலில் உறுப்பினர்கள் ஆதரவைப் பெரிதும் போற்றுகிறேன்- அமிருடின் கூறுகிறார்

ஷா ஆலம், மே 17– தற்போது நடைபெற்று வரும் கெஅடிலான் கட்சித் தேர்தலில் உறுப்பினர்கள் தமக்கு வழங்கி வரும் ஆதரவை தாம் பெரிதும் போற்றுவதாக சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்றத்தின் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தேர்தல் தொடக்க கட்டத்தில் இருந்தாலும் உறுப்பினர்களிடமிருந்து கிடைக்கும் கருத்துகள் உற்சாகமூட்டும் வகையில் உள்ளதாக உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அவர் குறிப்பிட்டார்.

உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பு தெம்பூட்டும் வகையில் உள்ளதோடு அவை வாக்குகளாக எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது. எனினும், இதே பதவிக்கு போட்டியிடும் மற்ற வேட்பாளர்களின் ஆற்றலையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.

உறுப்பினர்கள் தங்கள் விவேகத்திற்குட்பட்டு இத்தேர்தலில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்யட்டும் என்றார் அவர்.

கோம்பாக், தாமான் மெலாவத்தியில் நேற்றிரவு நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் 18 வேட்பாளர்களில் அமிருடினும் ஒருவராவார். நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண், கட்சியின் தொடர்பு பிரிவு இயக்குநர் ஃபஹாமி பாட்சில், மகளிர் பிரிவுத் தலைவி பவுசியா சாலே உள்ளிட்டோர் இப்பதவிக்கு குறித்து வைத்துள்ளனர்.

கிளந்தான் மற்றும் திரங்கானுவில் கடந்த 12 ஆம் தேதியும் பகாங் மற்றும் கூட்டரசு பிரதேசத்தில் மே 13 ஆம் தேதியும் பெர்லிஸ், பினாங்கு, மலாக்கா, நெகிரி செம்பிலானில் 16 ஆம் தேதியும் கட்சித் தேர்தல் நடைபெற்றது.

சிலாங்கூரில் வரும் 21 ஆம் தேதியும் மறுநாள் 22 ஆம் தேதி பேராக், சபா மற்றும் சரவாக்கிலும் தேர்தல் நடைபெறும்.


Pengarang :