ANTARABANGSAECONOMY

தானியச்  சோள உற்பத்தியில் சிலாங்கூர்- நெகிரி செம்பிலான் ஒத்துழைப்பு

ஷா ஆலம், மே 19- தானியச் சோள உற்பத்தியில் ஒத்துழைப்பை நல்குவது தொடர்பில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகமும் (பி.கே.பி.எஸ்.) நெகிரி செம்பிலான் மந்திரி புசார் கழகமும் (எம்.பி.ஐ.என்.எஸ்.) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இரு மாநில மந்திரி புசார்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கு நடைபெற்றது. பி.கே.பி.எஸ். தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸியும் நெகிரி செம்பிலான் மாநில நிதி அதிகாரியும் எம்.பி.ஐ.என்.எஸ். இயக்குநருமான டத்தோ முகமது கிடிர் மஜிட்டும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இரு மாநிலங்களின் ஒத்துழைப்பின் வாயிலாக கோழி தீவன விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் அந்த தானியத்திற்கு வெளிநாடுகளை சார்ந்திருக்கும் போக்கை குறைக்கவும் இயலும் என்று கூறினார்.

உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக சிலாங்கூரை உருவாக்க நாங்கள் முயன்று வருகிறோம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலம் என்ற முறையில் இதனை சாத்தியப்படுத்த முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இங்குள்ள பி.கே.பி.எஸ் தலைமையகத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கு நடைபெற்றது. சிலாங்கூர் மந்திரி பெசாருடன் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருணும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.


Pengarang :