ECONOMYSELANGOR

சிலாங்கூர் அரசின் மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி 60,000 குடும்பங்கள் பயன் பெற்றன

ஷா ஆலம், மே 19- கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் மாநிலம் முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட உணவுப் பொருள் மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி சுமார் 60,000 குடும்பங்கள் பயன் பெற்றன.

இந்த மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தின் வாயிலாக மாநில மக்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் காய்கறிகள் உள்ளிட்ட புதிய உணவுப் பொருள்களைப் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மக்கள் புதிய உணவுப் பொருள்களைப் பெறுவதற்குரிய வாய்ப்பினைப் பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் மாநில அரசு சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக இத்திட்டத்தை அமல்படுத்தியது என்றார் அவர்.

மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் சுமையை தற்காலிக அடிப்படையில் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. எனினும், உணவு விநியோகம் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்களை சார்ந்திருப்பதை தவிர்ப்பது குறித்து நாம் விரிவாக ஆலோசிக்க  வேண்டியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கிம்மாஸ் மற்றும் சிலாங்கூரின்  கோல லங்காட் செலத்தான் பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள சோள பயிரீட்டுத் திட்டம், மாநில அரசின் உணவுப் பொருள் விலைக்கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமைவதாகவும் அமிருடின் குறிப்பிட்டார்.


Pengarang :