ECONOMYNATIONAL

சரக்கு விமானம், பட்டுவாடா சேவை மூலம் போதைப் பொருள் கடத்தும் முயற்சி முறியடிப்பு

சிப்பாங், மே 19- சரக்கு விமானம் மற்றும் கூரியர் எனப்படும் பொருள் பட்டுவாடா சேவை மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து சபா மற்றும் சரவா மாநிலங்களுக்கு போதைப் பொருளைக் கடத்தும் முயற்சியை போலீசார் முறியடித்துள்ளனர்.

இம்மாதம் மேற்கொள்ளப்பட்ட இருவேறு சோதனை நடவடிக்கைகளில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய சரக்கு சேவைப் பிரிவு மற்றும் கூரியர் சேவை வழியாக ஷாபு வகை போதைப் பொருளைக் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியை தாங்கள் முறியடித்துள்ளதாக கே.எல்.ஐ.ஏ. மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி இம்ரான் அப்துல் ரஹ்மான் கூறினார்.

இம்மாதம் 8 மற்றும் 11 ஆம் தேதிகளில் கே.எல்.ஐ.ஏ. சரக்கு கட்டிடத் தொகுதியில் பத்து லட்சம் வெள்ளி மதிப்புள்ள 28 கிலோ ஷாபு வகை போதைப் பொருளை தாங்கள் கைப்பற்றியதாக இன்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

கடந்த 8 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சபா மாநிலத்தின் தாவாவ் நகருக்கு அனுப்பப்படவிருந்த மைக்ரோ அவன் சாதனத்தில் 3 கிலோ போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த து கண்டு பிடிக்கப்பட்டது.

சில தினங்களுக்குப் பின்னர் அதாவது மே 11 ஆம் தேதி தாவாவ் மற்றும் கூச்சிங்கிற்கு அனுப்பப்பட்ட இரு ஒலிபெருக்கி சாதனங்களில் 25 கிலோ போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது என்றார் அவர்.

கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொருள் பட்டுவாடா நிறுவனத்தின் மூலம் இந்த போதைப் பொருள் அனுப்பப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக  அவர் குறிப்பிட்டார்.

இந்த பொருள்களில் இடம் பெற்றிருந்த அனுப்புநர் மற்றும் பெறுநர் பெயர்கள் போலியானவை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் அவர்.


Pengarang :