ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றின் வாராந்திர எண்ணிக்கை 28.8 விழுக்காடு குறைந்தது

கோலாலம்பூர், மே 23– நாட்டில் 20வது நோய்த் தொற்று வாரத்தில் கோவிட்-19 நிலவரம் மேம்பாடு கண்டு வருகிறது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரத்தில் புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் குறைந்துள்ளதோடு நோயிலிருந்து விடுபட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த மே 15 முதல் 21 வரையிலான அந்த 20வது நோய்த் தொற்று வாரத்தில் புதிய நோய்த் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 28.8 விழுக்காடு குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடந்த வாரம் நோய்த் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 13,630 ஆக இருந்து. அதற்கு முந்தைய வாரம் அதாவது 19 வது நோய்த் தொற்று வாரத்தில் இந்த எண்ணிக்கை 19,137 ஆக பதிவாகியிருந்தது என்று அவர் தெரிவித்தார்.

இதனுடன் சேர்த்து நாட்டில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 லட்சத்து 89 ஆயிரத்து 503 ஆக உயர்ந்துள்ள வேளையில் அவற்றில் 28,085 சம்பவங்கள் இன்னும் தீவிரத் தன்மையுடன் உள்ளன என்றார் அவர்.

கடந்த 20வது நோய்த் தொற்று வாரத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 21.1 விழுக்காடு அதிகரித்து 12,618 ஆக ஆகியுள்ளது. 19வது நோய்த் தொற்று வாரத்தில் இந்த எண்ணிக்கை 15,278 ஆக இருந்தது என்று அவர் மேலும் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனை அல்லது பி.கே.ஆர்.சி. எனப்படும் தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையத்தில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 20வது நோய்த் தொற்று வாரத்தில் 9 விழுக்காடு குறைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :