ECONOMYSELANGOR

கோழி பற்றாக்குறைக்கு விலையேற்றம், தேவை அதிகரிப்பே காரணம் ஹிஷாம் ஹஷிம் தகவல்

ஷா ஆலம், மே 23- சிலாங்கூரில்  கோழி விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு பெருநாள் காலத்தில் அந்த உணவுப் பொருளுக்கான தேவை அதிகரிப்பும் விலையேற்றமும் ஒருசேர ஏற்பட்டதே காரணம் எனக் கூறப்படுகிறது.

அதோடு மட்டுமின்றி பண்ணைகளில் கோழிகள் நோயினால் பாதிக்கப்பட்டதும் இப்பிரச்னை தீவிரமடையக் காரணமாக இருந்துள்ளதாக நவீன விவசாயம் மற்றும் விவசாயத் தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

எனினும், இந்த நோய்ப் பரவல் தொடர்பில் தமது தரப்பு அதிகாரப்பூர்வமாக எந்தப் புகாரையும் பெறவில்லை என்று அவர் சொன்னார்.

இவ்விவகாரம் குறித்து ஆராய்வதற்காக  நவீன விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழுவின் கீழுள்ள அனைத்து துறைகள் மற்றும் நிறுவனப் பிரதிநிதிகளுடன் நாளை சந்திப்பு நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கோத்தா அங்கிரிக் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் இங்குள்ள ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

கோழி விநியோகத்தின் நடப்பு நிலவரங்களைக் கண்டறிவதற்காக மாநிலத்திலுள்ள அனைத்து கோழி விநியோகிப்பாளர்கள் மற்றும் பண்ணை உரிமையாளர்களைத் தொடர்பு கொள்ளும்படி கால்நடைச் சேவைத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :