ECONOMYSELANGOR

சிலாங்கூர் அரசின் ஜோப்கேர் திட்டத்தில் வாய்ப்பு- முன்னாள் கைதிகள் மகிழ்ச்சி

ஷா ஆலம், மே 23- சிலாங்கூர் அரசின் ஏற்பாட்டில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புத் திட்டத்தில்  பங்கு பெறுவதற்குரிய வாய்ப்பு தங்களுக்கும் கிடைத்தது குறித்து முன்னாள் கைதிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தங்களில் ஒருவராக இச்சமூகம் எங்களையும் பார்க்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று சிறைச்சாலைத் துறையின் ஏற்பாட்டில் இந்த வேலை வாய்ப்பு திட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் கைதியான ஆர்.இளவரசன் (வயது 31) கூறினார்.

சிறைச்சாலைத் துறையின் ஏற்பாட்டில் இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில் பங்கு கொண்ட 30 முன்னாள் கைதிகளில் இவரும் ஒருவராவார்.

சமூகத்தில் பயனுள்ள பிரஜையாக திருந்தி வாழ்வதற்கு கிடைத்த வாய்ப்பாக இதனைத் தாம் கருதுவதாக போதைப் பொருள் குற்றத்திற்காக நான்காண்டு சிறைத்தண்டனையை அனுபவித்த அவர் சொன்னார்.

இந்த வேலை வாய்ப்புத் திட்டங்களில் எங்களையும் இணைத்துக் கொண்ட சிலாங்கூர் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். என்றார் அவர்.

இன்று ஸ்தாப்பாக், ஆயர் பானாஸ் சமூக மண்டபத்தில் நடைபெற்ற ஜோப்கேர் வேலை வாய்ப்புத் திட்டத்தில்  செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தாம் அனுபவித்த ஆறு மாதச் சிறைத்தண்டனை திருந்தி வாழ்வதற்கும் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கும் வாய்ப்பினை வழங்கியதாக 25 வயதான சுரேந்திரன் கூறினார்.

இந்த வேலை வாய்ப்புத் திட்டம் எங்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரும் என நம்புகிறோம். முன்னாள் கைதிகள் என்ற காரணத்திற்காக இச்சமூகம் எங்களை தொடர்ந்து தண்டிக்காமல் எங்களையும் சமூகத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறோம் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில ஆக்கத்திறனளிப்பு பிரிவினால்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஜோப்கேர் வேலை வாய்ப்புத் திட்டத்தை  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தொடக் கை வைத்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வேலை இழந்த குறைந்த, நடுத்தர மற்றும் உயர் தொழில்திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் நோக்கில் மாநில அரசு இத்திட்டத்தை அமல்படுத்துகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி கிள்ளான், டேவான் ஹம்சாவில் தொடங்கிய இந்த வேலை வாய்ப்பு பயணத் தொடர் வரும் ஜூன் மாதம் 25 ஆம் தேதி சபாக் பெர்ணம், டேவான் ஸ்ரீ பெர்ணமில் முடிவடைகிறது.

இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் https://uppsselangor.wixsite.com/my-site  எனும் அகப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஜோப்கேர் வேலை வாய்ப்பு திட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் வருமாறு-

-கோம்பாக், டேவான் தாமான் கோம்பாக் (ஜூன் 4)
-டேவான் டத்தோ ஹொர்மாட், தஞ்சோங் காராங் ( ஜூன் 11 மற்றும் 12)
-கோல லங்காட், டேவான் பந்திங் பாரு (ஜூன் 18)
-சபாக் பெர்ணம், டேவான் ஸ்ரீ பெர்ணம் (ஜூன் 25)


Pengarang :