ECONOMYSELANGOR

கெஅடிலான் தேர்தல் முடிவுகள் ஒத்தி வைப்பு- எட்டு தொகுதிகளில் மறு வாக்கெடுப்பு

கோலாலம்பூர், மே 23- பி.கே.ஆர். கட்சியின் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்தலில் நான்கு மாநிலங்களில் உள்ள எட்டு தொகுதிகளில் மறு நேரடி வாக்களிப்பு இம்மாத இறுதிக்குள் நடைபெறவுள்ளதோடு அந்த வாக்கெடுப்புக்குப் பின்னரே கட்சித் தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் வெளியிடப்படும்.

அந்த எட்டு தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்துவதற்கான தேதியை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கட்சியின் தேர்தல் குழுத் தலைவர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

கிளந்தான் மாநிலத்தின் குவா மூசாங், பெங்காலான் செப்பா, பாச்சோக், கெத்தேரே மற்றும் தும்பாட், திரங்கானுவின் டுங்குன், சிலாங்கூரின் உலு சிலாங்கூர், கெடா மாநிலத்தின் பாடாங் செராய் ஆகியவையே அந்த தொகுதிகளாகும் என அவர் குறிப்பிட்டார்.

நேரடி வாக்களிப்பின் போது ஏற்பட்ட சில நுட்ப பிரச்னைகளால் அந்த எட்டு தொகுதிகளிலும் மறு வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பல தொகுதிகளிலிருந்து நாங்கள் ஆட்சேபங்களைப் பெற்றுள்ளோம். அந்த ஆட்சேபங்களை தேர்தல் குழு ஆராய்ந்து வருகிறது. மறுதேர்தல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அந்த எட்டு தொகுதிகளுடன் சேர்த்து மறு வாக்கெடுப்பை நடத்துவோம் என்று அவர் கூறினார்.

இதன் காரணமாக, அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் முடிவுகளை இன்று பி.கே.ஆர். கட்சியின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் வெளியிடும் முடிவை ஒத்தி வைக்க வேண்டியுள்ளதாக கூறிய அவர், பிரச்னைக்குரிய தொகுதிகளில் மறு தேர்தல் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குப் பின்னரே கட்சித் தேர்தல் முடிவுகள் தெரியவரும் என்றார்.

கிளந்தானிலுள்ள ஐந்து தொகுதிகள், திரங்கானுவின் டுங்குன் மற்றும் கெடாவின் பாடாங் செராய் தொகுதிகளில் நேரடிக் வாக்களிப்பின் போது ஏற்பட்ட நுட்பக் காரணங்களால் மறு தேர்தல் நடத்தப்படும் வேளையில் உலு சிலாங்கூர் தொகுதியில் மேசை, நாற்காலி போன்ற தளவாடங்கள் தயார் செய்யப்படாததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 222 தொகுதிகளில் 57 இல் அனைத்து பதவிகளும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு பெற்றதாக டாக்டர் ஜலிஹா கூறினார்.


Pengarang :