ECONOMYSELANGOR

சுத்தமான நீர் விநியோகத்தை உறுதி செய்ய ஆண்டுக்கு 150 கிலோ மீட்டர் குழாய்கள் மாற்றம்- ஆயர் சிலாங்கூர் தகவல்

ஷா ஆலம், மே 24– சுத்திகரிக்கப்பட்ட நீருக்கான தேவையை ஈடு செய்ய பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் ஆண்டுக்கு 150 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்களை மாற்றி வருகிறது.

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவிலுள்ள 84 லட்சம் பயனீட்டாளர்கள் சுத்தமான மற்றும் பாதுகாப்பான நீரைப் பெறுவதை உறுதி  செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இம்மூன்று பிராந்தியங்களிலும் உள்ள 30,076 கிலோ மீட்டர் குழாய்கள் உச்சபட்ச பாதுகாப்புடன் இருப்பதை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் எப்போதும் உறுதி செய்து வருகிறது.

பயனீட்டாளர்கள் பெறும் ஒவ்வொரு துளி நீரும் பயன்மிக்கதாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஆண்டு தோறும் 150 கிலோ மீட்டர் தொலைவுக்கு பழைய குழாய்களை மாற்றும் பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்று அந்நிறுவனம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு முழுவதும் அட்டவணையிடப்பட்ட 1,562 பராமரிப்பு பணிகளை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பயனீட்டாளர்கள் பாதுகாப்பான மற்றும் சுத்தமான நீரை தங்கு தடையின்றி பெறுவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

நீடித்த நீர் விநியோகத்தை உறுதி செய்ய கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 800 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் குழாய்களை மாற்றியுள்ளது.


Pengarang :