ECONOMYNATIONAL

ஊழல் புகார் தொடர்பில் 379 விசாரணை அறிக்கைகள் திறப்பு- 425 பேர் கைது- எம்.ஏ.சி.சி. தகவல்

புத்ரா ஜெயா, மே 24-இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை ஊழல் புகார் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) 379 விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளதோடு 425 பேரையும் கைது செய்துள்ளது.

இவ்வாண்டின் முதல் காலாண்டில் 1 கோடியே 25 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் கைப்பற்றப்பட்டதோடு 5 கோடியே 90 வெள்ளி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் என்று எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

கடந்தாண்டில் எம்.ஏ.சி.சி. 829 விசாரணை அறிக்கைகளைத் திறந்து 851 பேரை கைது செய்தது. இக்காலக்கட்டத்தில் 16.2 கோடி வெள்ளி சொத்துகள் கைப்பற்றப்பட்ட வேளையில் 513 கோடி வெள்ளி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.

இன்று இங்கு நடைபெற்ற மூன்றாவது மலேசிய ஊழல் தடுப்பு ஆய்வரங்கில் முக்கிய உரை நிகழ்த்திய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஐ.எஸ்.ஐ. எனப்படும் அனைத்துலக வியூக கழகத்தின் தலைவரும் நிறுவனருமான சியா சுவான் யோங்கும் கலந்து கொண்டார். ஊழலை ஒழிப்பதற்கான ஆக்ககரமான வழிமுறைகளைக் கண்டறியும் நோக்கில் இந்த ஆய்வரங்கு நடத்தப்படுகிறது.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளை நிறுவன சமூக கடப்பாட்டின் அடிப்படையில் நடத்துவதற்கு வழங்கப்படும் வரிச் சலுகை வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளும்படி உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களை அஸாம் பாக்கி தனதுரையில் கேட்டுக் கொண்டார்.

1எம்டிபி சொத்துகளை மீட்பது குறித்து விவரித்த அவர், சமரசத் தீர்வின் வழி 511 கோடி வெள்ளி மதிப்பிலான சொத்துகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியிருக்கும் சொத்துகளை மீட்பதற்கு எம்.ஏ.சி.சி. தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.


Pengarang :