ECONOMYSELANGOR

கோழி மலிவு விற்பனைத் திட்டம் ஜூன் முதல் தேதி மீண்டும் தொடங்கும்

கோம்பாக், மே 24– கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் நோன்புப் பெருநாள் வரை மாநில அரசினால் மேற்கொள்ளப்பட்ட  மலிவு விலை கோழி விற்பனைத் திட்டம் வரும் ஜூன் மாதம் முதல் தேதி தொடங்கி மீண்டும் அமல்படுத்தப்படும்.

மாநிலத்தில் தற்போது நிலவி வரும் கோழி பற்றாக்குறைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் விதமாக இந்த மலிவு விற்பனைத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக நவீன விவசாயம் மற்றும் விவசாய அடிப்படை துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

இந்த மலிவு விலைத் திட்டம் ஐடில் அட்ஹா எனப்படும் தியாகத் திருநாள் வரை நடத்தப்படும். சந்தையை விட மலிவான விலையில் இந்த கோழிகளில் விற்கப்படும் என்பதோடு பயனீட்டாளர்கள் எதிர்நோக்கும் கோழி பற்றாக்குறை பிரச்னைக்கும் தீர்வு காண உதவும் என்று அவர் தெரிவித்தார்.

கோழி பற்றாக்குறைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் விற்பனைக்கு வைக்கப்படும் கோழிகளின் எண்ணிக்கையை நான்காயிரத்திலிருந்து பத்தாயிரமாக உயர்த்தவிருக்கிறோம் என்றார் அவர்.

இன்று இங்குள்ள கோம்பாக் மாவட்ட விவசாய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.), கோப்பராசி வர்கா ஹிஜாவ் சிலாங்கூர் கூட்டுறவுக் கழகம், ஃபாமா எனப்படும் கூட்டரசு விவசாய சந்தை வாரியம் மற்றும் இதர துறைகளுடன் இணைந்து இந்த மலிவு விற்பனைத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் கோழி விநியோகம் 50 விழுக்காடு வரை குறைந்துள்ளது. இம்மாநிலத்தில் ஆண்டுக்கு 17 கோடியே 40 லட்சம் கோழிகள் தேவைப்படும் நிலையில் 8 கோடியே 40 லட்சம் கோழிகள் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன என்றார் அவர்.


Pengarang :