ECONOMYSELANGOR

சிலாங்கூரில் முதல் காலாண்டில் 160,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கம்- மந்திரி புசார்

ஷா ஆலம், மே 24 – இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சிலாங்கூர் மக்களுக்கு பல்வேறு துறைகளில் மொத்தம் 163,645 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 2021 மூன்றாம் காலாண்டில் 3.6 விழுக்காடாக  இருந்த வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டின் இறுதியில் 2.9 சதவீதமாக குறைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

இறைவன் அருளால்  சிலாங்கூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் சிலாங்கூர் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஏற்ப மாநிலத்தில் வேலையின்மை விகிதம் குறைந்து வருகிறது என்று அவர் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தின் செழிப்பு மற்றும்  மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதாக உற்பத்தி, விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் மாநில அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது  என்று அமிருடின் கூறினார்.

எங்களின் இந்த முயற்சி, வேலை வாய்ப்புகளைத் தவிர மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி  பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.

வரும் ஜூன் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்புக் கண்காட்சியின் வழி வேலையின்மை விகிதத்தைக் குறைக்க மாநில அரசு மேற்கொள்ளும்  முயற்சி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஷா ஆலம் மாநகர் மன்ற மாநாட்டு மையத்தில் நடைபெறும்  இந்த மெகா வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்கும் 100 நிறுவனங்கள் சேவை, உற்பத்தி, மின்னியல் மற்றும் நிர்வாகத் துறைகளில்  சுமார் 20,000 வேலை வாய்ப்புகளை வழங்கும்.

வேலை வாய்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் selangorjobportal.com.my எனும் அகப்பக்கம் வாயிலாக முன் பதிவு செய்யலாம் .


Pengarang :