ECONOMYNATIONAL

பெருந்தொற்று காலத்தில் நிகழ்ந்த நிதி முறைகேடுகளை அம்பலப்படுத்துவீர்- எம்.ஏ.சி.சி.க்கு அன்வார் கோரிக்கை

ஷா ஆலம், மே 25- ஈராண்டுகளுக்கு முன்னர் நாடு கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்நோக்கியிருந்த போது நிகழ்ந்த நிதி முறைகேட்டை அம்பலப்படுத்தும்படி ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்.ஏ.சி.சி.) டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு எதிரான கடும் நடவடிக்கை சமூகத்தின் உயர்ந்தபட்ச உயர்நெறியை பிரதிபலிப்பதாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவருமான அவர் சொன்னார்.

ஊழல் விஷயத்தில் நாம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. ஆகவே ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

கடந்த ஈராண்டுகளாக பெருந்தொற்று நம்மைத் தாக்கிய நிலையில் மக்கள் நிதியைக் கொள்ளையிட்ட கொள்ளையர்களை எம்.ஏ.சி.சி. அம்பலப்படுத்த வேண்டும் என்பதோடு அவர்களை கடுமையாக தண்டிக்கவும் வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, 1எம்.டி.பி. நிறுவனத்தின் சொத்துகளை திரும்பக் கொண்டு வருவது தொடர்பில் எம்.ஏ.சி.சி. ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி வெளியிட்ட அறிக்கையை டத்தோஸ்ரீ அன்வார் வரவேற்றார்.

ஈராண்டுகளுக்கு முன்னர் நாட்டில்  கோவிட்-19 பெருந் தொற்று பரவிய போது சுகாதாரத் துறை சம்பந்தப்பட்ட சில கொள்முதல் நடவடிக்கைகளில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக அஸாம் பாக்கி நேற்று முன்தினம் கூறியிருந்தார்.


Pengarang :