ECONOMYSELANGOR

ரவாங் சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியால் நான்கு வழித்தடங்களில் மீண்டும் பஸ் சேவை

ஷா ஆலம், மே 27- மாரா லைனர் சென். பெர்ஹாட் நிறுவனத்துடனான ஒத்துழைப்பின் காரணமாக கோலாலம்பூர்-ரவாங் இடையிலான நான்கு முக்கிய வழித்தடங்களில் பஸ் சேவை நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கப்பட்டது.

கோலாலம்பூரின் லெபோ புடு- ரவாங் தடம் மற்றும் கோலாலம்பூர் லெபோ புடு தொடங்கி கன்றி ஹோம்ஸ் வழியாக தாசேக் புத்ரி வரையிலான தடம், கோலாலம்பூர் லெபோ புடு-செலாயாங் பாரு தடம், கோலாலம்பூர் லெபோ புடு-புக்கிட் இடமான் தடம்  ஆகியவையே பாதிக்கப்பட்ட அந்த நான்கு வழித் தடங்களாகும் என்று ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

இந்த பஸ் சேவை தொடர்பான சோதனை ஓட்டத்தை தாமும் மாரா லைனர் நிறுவன பணியாளர்களும் ரவாங் பஸ் முனையத்தில் மேற்கொண்டதாக சுவா தெரிவித்தார்.
வரும் ஜூன் முதல் தேதி அனைத்து 12 பஸ் சேவைகளையும் மறுபடியும் தொடங்குவது தொடர்பில் இரு தரப்பினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இத்தடங்களுக்கான பஸ் சேவை திடீரென நிறுத்தப்பட்டதால் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகினர். இதன் தொடர்பில் தமது தரப்பு நிறையப் புகார்களைப் பெற்றதாக சுவா கூறியிருந்தார்.


Pengarang :