ECONOMYNATIONAL

“செர்வ் இலிட்“ பேரிடர் மீட்புக் குழுவின் பெயர் “செர்வ் ரெஸ்க்யூ“ என பெயர் மாற்றம்

ஷா ஆலம், மே 30- “செர்வ் இலிட்“ எனப்படும் தன்னார்வலர் பேரிடர் மீட்புக் குழுவின் பெயர் “செர்வ் ரெஸ்க்யூ“ (மீட்பு) என பெயர் மாற்றம் கண்டுள்ளது. பேரிடர் ஏற்படும் பட்சத்தில் அதில் சிக்கியவர்களை மீட்கும் அதன் பிரதான நோக்கத்தின் அடிப்படையில் இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையுடன் நடத்தப்பட்ட விரிவான விவாதத்திற்குப் பிறகு இந்த மறுபெயரிடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இளைய தலைமுறையினர்  மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையுடன் நாங்கள் விவாதித்தோம். ரெஸ்க்யூ என்ற வார்த்தை பொருத்தமானதாகவும் பொது மக்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும் என அத்துறையினர் கருதுகின்றனர் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள டத்தாரான் மெர்டோக்காவில் நடைபெற்ற சிலாங்கூர் எக்ஸ்டிவி தற்காப்புக் கலை வெற்றியாளர் போட்டியைத் தொடக்கி  வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் மாதம் செயல்படத் தொடங்கும் இந்த செர்வ் மீட்புக் குழுவில் சேர்வதற்கு 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது எங்களிடம் 100 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் உள்ளது. இந்த குழுவுக்கு அதிகப்பட்ச தகுதி கொண்டவர்களைத் தேர்வு செய்வதற்கு ஏதுவாக சிலாங்கூர் விளையாட்டு மன்றம் அவர்களை சோதனைகளுக்கு உட்படுத்தி வருகிறது என்றார் அவர்.

தகுதியானவர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டவுடன் பயிற்சிக்காக அவர்களின் பெயர் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையிடம் வழங்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :