ECONOMYSELANGOR

கெஅடிலான் உதவித் தலைவர் தேர்தலில் அமிருடின் முன்னிலை 

ஷா ஆலம், மே 30– கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் பதவிக்கான தேர்தலில் அக்கட்சியின் சிலாங்கூர் மாநில தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னிலை வகிக்கிறார்.

நேற்றிரவு 10.00 மணி நிலவரப்படி, சரவா நீங்கலாக மற்ற மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கையில் தனது நெருங்கிய போட்டியாளரான சாங் லி கிங்கை விட டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூடுதல் வாக்குகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறார்.

இந்த போட்டியில் நெகிரி செம்பிலான் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் மூன்றாவது இடத்திலும் நிக் நஸ்மி நிக் அகமது நான்காவது இடத்திலும் உள்ளதை அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் காட்டுகின்றன.

சிலாங்கூர் மாநில மந்திரி புசாரான அமிருடின் ஷாரி, நேற்று நடைபெற்ற கோம்பாக் கெஅடிலான் தொகுதிக்கான தேர்தலில் முன்னாள் பேராக் மாநில கெஅடிலான் தலைவர் ஃபார்ஷா வாஃபா சல்வடோர் ரிஸால் முபாரக்கைத் தோற்கடித்தார்.

அண்மையில் நடைபெற்ற கெஅடிலான் கட்சியின் 2022 ஆம் ஆண்டிற்கான தேர்தலில் அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியின்றி தேர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் தேசிய துணைத் தலைவர் தேர்தலில் முன்னாள் பண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயிலை அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.


Pengarang :