ECONOMYSELANGOR

ஐ-லெஸ்தாரி திட்டத்தின் கீழ் 115 தொழில் முனைவோருக்கு வெ. 1 கோடி கடனுதவி- ஹிஜ்ரா வழங்கியது

ஷா ஆலம், மே 30- ஐ-லெஸ்தாரி திட்டத்தின் கீழ் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை 1 கோடியே 10 லட்சம் வெள்ளியை கடனுதவியை யாயாசான் சிலாங்கூர் ஹிஜ்ரா அறவாரியம் வழங்கியுள்ளது.

வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கிலான  இத்திட்டத்தின் கீழ் 115 தொழில் முனைவோர் பயன்பெற்றுள்ளதாக அந்த அறவாரியத்தின் சந்தை மேம்பாட்டு அதிகாரி முகமது ஏசான் முகமது ரோஸ்டி கூறினார்.

கடனைத் திரும்பச் செலுத்தும் நடைமுறை ஊக்கமளிக்கும் வகையில் உள்ளதோடு 107 விழுக்காடு அடைவு நிலையையும் பதிவு செய்துள்ளது. கடன் பெற்றவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக செலுத்தியதே இதற்கு காரணமாகும் என்றார் அவர்.

இது தவிர, மேலும் 70 தொழில் முனைவோரின் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளதாக சிலாங்கூர் கினியிடம் அவர்  தெரிவித்தார்.

இந்த கடனுதவித் திட்டம் தொடர்பில் மேல் விபரங்கள் பெற விரும்புவோர் மாநிலம் முழுவதும் 20 இடங்களில் செயல்படும்  ஹிஜ்ரா அலுவலகங்களிலும் http://www.hijrahselangor.com  என்ற அகப்பக்கம் வாயிலாகவும் தகவல்களைப் பெறலாம் என அவர் சொன்னார்.

இஸ்லாமிய கடனுதவி அடிப்படையிலான ஐ-லெஸ்தாரி, ஐ-அக்ரோ மற்றும் ஐ-பெர்மூசிம் ஆகிய திட்டங்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடக்கி வைத்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிலிருந்து  வர்த்தகர்கள் மீள்வதற்கு ஏதுவாக இத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.


Pengarang :