ECONOMYNATIONAL

பெருந்தொற்றிலிருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில் மீண்டும் ஜி.எஸ்.டி. அமலாக்கமா? பக்கத்தான் எதிர்ப்பு

ஷா ஆலம், ஜூன் 1- ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள் சேவை வரி முறையை மீண்டும் அமல்படுத்துவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கேப் முன்வைத்துள்ள பரிந்துரையில் தங்களுக்கு உடன்பாடில்லை என பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கூறியுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக வருமானம் பாதிப்பு, வாழ்க்கை செலவின அதிகரிப்பு, பண வீக்கம் ஆகியவற்றால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக அந்த கூட்டணியின் தலைவர் மன்றம் கூறியது.

ஜி.எஸ்.டி. வரியை மீண்டும் அமல்படுத்தினால் பொருள்களின் விலை அபரிமித உயர்வு காணும். பொருள் விநியோகப் பிரச்னை மற்றும் சம்பள உயர்வின்மை போன்றவை மக்களின் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என அக்கூட்டணி நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்தது.

கெஅடிலான் கட்சித் தலைவர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர் மாட் சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக், அப்கோ கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ வில்ப்ரட் மேடியஸ் தங்காவ் ஆகியோர் இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தம் மற்றும் சிறப்பான நிர்வாக முறையை  அமல்படுத்தாமல் மக்களிடம் மேலும் அதிகமான வரியை வசூலிப்பது சிறிதும் நியாயமற்றது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின் போது பெரும்பாலான மக்கள் ஜி.எஸ்.டி. வரியை நிராகரித்ததையும் பக்கத்தான் தலைவர் மன்றம் பிரதமருக்கு நினைவூட்டியது.


Pengarang :