ECONOMYNATIONAL

கடந்தாண்டில் பண வீக்கம் 2.5 விழுக்காடு அதிகரிப்பு- 184 உணவுப் பொருள்கள் விலை உயர்வு கண்டன

கோலாலம்பூர், ஜூன் 1– உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடந்த 2021 ஆம் ஆண்டில் நாட்டின் பண வீக்கம் 2.5 விழுக்காடு உயர்வு கண்டதாக மலேசிய புள்ளி விபரத் துறை கூறியது.

பயனீட்டாளர் விலைக் குறியீட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ள 552 உணவுப் பொருள்களில் அக்காலக்கட்டத்தில் 184 விலையேற்றம் கண்டதாக அத்துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸிர் மாஹிடின் கூறினார்.

கடந்த 2019 இல் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இது 0.7 விழுக்காடு அதிகமாகும் என்று அவர் சொன்னார்.

மக்களின் அன்றாட வாழ்வில் கோவிட்-19 பெருந்தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தடுப்பூசியை இலவசமாக வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் வணிகத் துறையில் நம்பிக்கையை ஏற்படுத்தி தைரியமாக செலவு செய்வதற்குரிய நம்பிக்கையை பயனீட்டாளர்களுக்கு வழங்கியது என்று அவர் குறிப்பிட்டார்.

இது தவிர கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி மாநில எல்லைகளைக் கடப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதோடு பொருளாதார நடவடிக்கைகளும் முழுமையாக திறந்து விடப்பட்டன. இதனால் நாட்டின் பொருளாதாரம் குறிப்பாக விநியோகம் மற்றும் சில்லறை வர்த்தகம் மீட்சிபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது என்றார் அவர்.

உணவு பானங்களை உள்ளடக்கிய பிரிவில் சுமார் 80 விழுக்காட்டு பொருள்கள் விலையேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

உலகளாவிய நிலையிலான மூலப் பொருள் விலையேற்றம் உணவு பண வீக்கத்திற்கு வழி வகுத்தது. கோழி தீவன விலையேற்றம் காரணமாக கடந்த 2020 இல் இருந்த சராசரி விலையை விட அதிகமாக கோழியின் விலை உயர்வு கண்டது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :