ECONOMYSELANGOR

நோய்களை முன்கூட்டியே தடுக்க மருத்துவப் பரிசோதனையை விரைந்து மேற்கொள்வீர்- பொதுமக்களுக்கு வலியுறுத்து

ஷா ஆலம், ஜூன் 1- அறிகுறி ஏதும் இல்லாத சில நோய்களை கவனிக்காத பட்சத்தில் அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மருத்துவப் பரிசோதனையை முன்கூட்டியே மேற்கொள்ளும்படி பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

அண்மைய சில ஆண்டுகளில் குறிப்பிட்ட சில நோய்களின் எண்ணிக்கை அபரிமித உயர்வைக் கண்டுள்ளதால் இவ்விவகாரத்தை அனைவரும் கடுமையானதாக கருத வேண்டும் என்று புத்ரா ஜெயா மருத்துவமனையின் மருத்துவ மற்றும் சிறுநீரக ஆலோசக நிபுணர் டாக்டர் ரபிடா அப்துல்லா கூறினார்.

சிறுநீரகப் பிரச்னை என்பது அமைதியாக கொல்லும் கொடிய நோயாக உள்ளது. நிலைமை மோசமான கட்டத்தை எட்டும் வரை அந்நோய்க்கான அறிகுறி வெளியில் தெரியாது. மலேசியாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 4 விழுக்காடாக இருந்த சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 15.5 விழுக்காடாக உயர்ந்துள்ளதை தரவுகள் காட்டுகின்றன என்று அவர் சொன்னார்.

மேலும் 2019 ஆம் ஆண்டின் தரவுகள் அச்சமூட்டும் வகையில் உள்ளன. அந்த தரவின்படி ஐவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது. அவர்களில் 50 விழுக்காட்டினர் அந்நோய் இருப்பதை அறியாமலே உள்ளனர். 10 பேரில் மூவர் உயர் இரத்த அழுத்தப் பிரச்னையைக் கொண்டுள்ளனர். 10 பேரில் நால்வருக்கு  கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளது.

இருவரில் ஒருவர் உடல் பருமன் பிரச்னையை எதிர்நோக்கியுள்ளார் என்றார் அவர்.
மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளாத பட்சத்தில் நோய் இருப்பது நமக்கு தெரிய வாய்ப்பில்லை. பல நோய்கள் மோசமான கட்டத்தை எட்டும் வரை அதற்கான அறிகுறியை சிறிதும் காட்டுவதில்லை என அவர் தெரிவித்தார்.

“நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எதற்காக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்?“ எனும் தலைப்பில் நடைபெற்ற விவாத நிகழ்வில் அவர் இதனைக் கூறினார். இந்த நிகழ்ச்சி மீடியா சிலாங்கூர் ஒளிபரப்பப்பட்டது.


Pengarang :