ECONOMYNATIONAL

கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா- இரு அம்சங்களை மெருகூட்ட அமைச்சரவை விருப்பம்

புத்ரா ஜெயா, ஜூன் 2- நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதை தடுக்கும் சட்ட மசோதா குறித்து நேற்று அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது அந்த மசோதா தொடர்பான இரு அம்சங்கள்  அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.

அந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தொடர்பில் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ  இட்ருஸ் ஹருண் அமைச்சரவைக்கு நேற்று விளக்கமளித்ததாக பிரதமர் துறை அமைச்சர் ( சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்) டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துவாங்கு ஜாபர் கூறினார்.

நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழுவினால் முன்வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

எனினும், அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள இரு அம்சங்களை சிறப்புத் தேர்வுக் குழு தெளிவுபடுத்தவும் செம்மைப்படுத்தவும் வேண்டும் என அமைச்சரவை விரும்புகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும், அந்த இரு அம்சங்கள் என்ன என்பதை அவர் விவரிக்கவில்லை. மக்களவையின் 85 வது நிரந்தர விதியின் படி சிறப்புத் தேர்வுக் குழு தொடர்பான எந்த தகவலும் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்படக்கூடாது என வான் ஜூனைடி குறிப்பிட்டார்.

பொதுவாக, இந்த சட்ட மசோதாவை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது. அமைச்சரவையில் எழுப்பப்பட்ட அந்த இரு அம்சங்களும் வரும் ஜூன் 7 ஆம் தேதி சிறப்புத் தேர்வுக் குழுவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு திருத்தங்கள் செய்யப்படும் என்றார் அவர்.


Pengarang :