ECONOMYNATIONAL

கோவிட்-19 நிர்வாக முறைகேடுகள் தொடர்பில் 25 விசாரணை அறிக்கைகள் திறப்பு- அஸாம் பாக்கி தகவல்

புத்ரா ஜெயா, ஜூன் 2- கோவிட்-19 நிர்வாகத்தை தவறான முறையில் கையாண்டது தொடர்பில் 25 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

பல்வேறு தவறுகளை உள்ளடக்கிய அந்த விசாரணைக்காக சம்பந்தப்பட்ட நபர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.

இந்த விசாரணை கோவிட்-19 நிர்வாக முறைகேடுகள் தொடர்பானவை என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். இதன் தொடர்பில் மேம்பாடுகள் இருப்பின் அது குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்போம் என்றார் அவர்.

ஒவ்வொரு சம்பவமும் வெவ்வேறானவை என்பதால் பலரை விசாரணைக்கு அழைத்துள்ளோம். மேலும் பல அழைக்கவுள்ளோம் என்று ஊடகவியலாளர்களுடன் எம்.ஏ.சி.சி. எனும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 நிர்வாக முறைகேடுகள் தொடர்பிலான விசாரணையின் ஆகக்கடைசி நிலவரங்கள் குறித்து வினவப்பட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா விசாரணைக்கு அழைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு, தேவையின் அடிப்படையில் விசாரணைக்காக சம்பந்தப்பட்ட நபர்களை அழைப்பதற்கான சாத்தியம் உள்ளது என அவர் பதிலளித்தார்.

தேவையின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் கூறியது போல் பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கிய  25 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆகவே, விசாரணைக்கு அமைச்சரை மட்டும் அழைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார் அவர்.


Pengarang :