ECONOMYHEALTHNATIONAL

மருந்து விநியோகத்தில் தட்டுப்பாடு இல்லை- சுகாதார அமைச்சு உத்தரவாதம்

புத்ராஜெயா, ஜூன் 3:-சந்தையில் காய்ச்சல் மற்றும் லேசான நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் பாராசிட்டமால், வைட்டமின் சி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகளின் விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை என்று சுகாதார அமைச்சின் மருந்தக பிரிவுக்கான தலைமை இயக்குனர் நோர்ஹலிசா ஏ.ஹலீம் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மருந்துகளுக்கு மாற்றாக அதே ஆக்கத்தன்மையுடன் கூடிய வேறு ரகத்தைச் சேர்ந்த மருந்துகள் சந்தையில் உள்ளதாக மருந்துகள் பற்றாக்குறை தொடர்பில் வெளிவந்த செய்திகளுக்கு விளக்கமளிப்பதற்காக இன்று வெளியிட்ட  ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.

காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள், வலி நிவாரணி மற்றும் கால், கை மற்றும் வாய்ப் புண் நோயின் அறிகுறிகளைக் குறைப்பதற்கான மருந்துகள் மற்றும் அத்தகைய மருந்துகளைத்  தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

காய்ச்சல் மற்றும் லேசான நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படும் பாராசிட்டமால், வைட்டமின் சி மற்றும் குழந்தைகளுக்கான இருமல் மற்றும் சளி மருந்துகள் போன்ற மருந்துகளுக்கான தேவை அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக நோர்ஹலிசா சொன்னார்.

மலேசிய மருந்துத் தொழில்கள் அமைப்பு, மலேசிய மருந்துக் கழகம்  மற்றும் மலேசியா மருந்து விநியோகிப்பாளர் சங்கம் ஆகியவற்றுடன் நேற்று நடந்த சந்திப்பில் இந்த மருந்துத் பற்றாக்குறை தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்டது என்றார் அவர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக உற்பத்தியாளர்கள் மருந்து உற்பத்தியை அதிகரித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.


Pengarang :