ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஹாஜ்ஜூப் பெருநாளுக்கு போதுமான அளவு கோழி கையிருப்பு உள்ளது

செர்டாங், ஜூன் 4- நாட்டில் கோழி பற்றாக்குறைப்  பிரச்னைக்கு இன்னும் ஒரு மாத காலத்தில் தீர்வு காணப்படும். அதே சமயம், அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும்  ஹாஜ்ஜூப் பெருநாளுக்கும் போதுமான அளவு கோழி கையிருப்பு உள்ளது உறுதி செய்யப்படும்.

கோழி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அத்தொழில் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் விளைவாக இந்த சாத்தியக் கூறுகள் தென்படுவதாக கால்நடைச் சேவைத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர்லிசான் முகமது நோர் கூறினார்.

உற்பத்தியை பெருக்குவதற்கு கால்நடை வளர்ப்போர் உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆகவே, நாம் மீட்சி நிலையை நோக்கி பயணிக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான தேசிய நிலையிலான அனைத்துலக கால்நடை தினத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த இரு வாரங்களாக நாட்டில் கோழி பற்றாக்குறை நிலவி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. பருவநிலை மாற்றம் கோழிகளுக்கு ஏற்பட்ட நோய்த் தாக்குதல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மேற்கொள்ளப்படாத கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகியவை அக்காரணங்களில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் திறந்த வெளி கோழிப்பண்ணை முறை ஆகியவையும் கோழி விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு காரணமாக விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :