ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எல்லைகள் திறக்கப்பட்டது முதல் பத்து லட்சம் சுற்றுப்பயணிகள் மலேசியாவுக்கு வருகை

ஷா ஆலம், ஜூன் 4- மலேசியா இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுப்பயணிகளை ஈர்த்துள்ளது. இவ்வாண்டு ஏப்ரல் முதல் தேதி நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாண்டில் 20 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை ஈர்க்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் ஏறக்குறைய ஐம்பது விழுக்காடு பூர்தியாகி விட்டது.

நாட்டிற்கு வந்த சுற்றுப்பயணிகளில் பெரும்பாலோர் சிங்கப்பூரியர்கள் என்றும் ஜப்பான், ஈரான், கொரியா போன்ற நாடுகளிலிருந்து மேலும் அதிகமான சுற்றுப்பயணிகள் வருகை புரிவர் என எதிர்பார்க்கப் படுவதாகவும் சுற்றுலா, கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.

கடந்த இரு மாதங்களில் நாங்கள் சிங்கப்பூரிலிருந்து சுமார் ஆறு லட்சம் சுற்றுப் பயணிகளைப் பெற்றுள்ளோம். அந்நாட்டிலிருந்து மட்டும் பத்து லட்சம் வரையிலான சுற்றுப்பயணிகளை ஈர்க்க முடியும் என நம்புகிறோம் என்றார் அவர்.

இன்று இங்கு பையர் பிளை விமானம் மற்றும் கோ ஜாலான்லா பிரசார இயக்கம் ஆகியவற்றைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இக்காலக்கட்டத்தில் வெளிநாடுகளிலிருந்தும் கணிசமான சுற்றுப்பயணிகள் வந்துள்ளனர். எனினும், சம்பந்தப்பட்டத் தரப்பினரிடமிருந்து தரவுகளுக்காக காத்திருப்பதால் அச்சுற்றுப்பயணிகள் குறித்த முழுமையாக எண்ணிக்கை தற்போதைக் கைவசம் இல்லை. எனினும், நிர்ணயித்த இலக்கை காட்டிலும் பாதி அளவை நாம் இப்போதே எட்டி விட்டோம் என்பதை உறுதியாக கூற முடியும் என்றார் அவர்.

வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளை நாட்டிற்குள் ஈர்ப்பதில் சுற்றுப்பயணிகள் நட்புறவான கோவிட்-19 எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முக்கிய பங்கினை ஆற்றுகின்றன என்றும் அவர் சொன்னார்.


Pengarang :