ECONOMYHEALTHSELANGOR

இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டத்தில் இதுவரை 3,215 பேர் பங்கேற்பு

சபாக் பெர்ணம், ஜூன் 6- கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் இதுவரை “சிலாங்கூர் சாரிங்“ இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் வாயிலாக 3,215 பேர் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களில் 3,157 பேர் இரத்த பரிசோதனையையும் 3,206 பேர் சிறு நீர் சோதனையையும் 1,520 பேர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சோதனையையும் 454 பேர் மலப் பரிசோதனையையும் 418 பேர் மேமோகிராம் எனப்படும் மார்பக புற்றுநோய்ச் சோதனையையும் 960 பேர் கண் பரிசோதனையையும் மேற்கொண்டதாக சிலாங்கூர் பொது சுகாதார ஆலோசக குழுவின் உறுப்பினர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.

இந்த பரிசோதனை இயக்கம் முற்றிலும் வேறுபட்டது. சோதனைக்கு வருவோருக்கு பொதுவான அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக முன்னதாக பெறப்பட்ட இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தேவையான சோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.

நோய்ப் பின்னணியைக் கொண்டிராத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படாது. இதன் வழி இச்சோதனை ஆக்ககரமானதாகவும் அதிகமானோர் பயன்பெறும் வகையிலும் உள்ளது உறுதி செய்யப்படுவதோடு அவசியமின்றி சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் ஏற்படக்கூடிய விரயத்தையும் தடுக்க இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சோதனையில் அதிகமானோர் பங்கேற்பர் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அச்சோதனையில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை வரவேற்கத்தக்க வகையில் உள்ளது என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் அரசு 34 லட்சம் வெள்ளி செலவில் இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 39,000 பேர் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு விதமான மருத்துவ பரிசோதனைகளை உள்ளடக்கிய இந்த திட்டம் கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் நடைபெறுகிறது.


Pengarang :