ECONOMYNATIONAL

நாட்டில் காய்கறிகளின் விலை ஜூலை மாதவாக்கில் சீரடையும்- பயனீட்டாளர் அமைச்சு நம்பிக்கை

ஷா ஆலம், ஜூன் 6 – தற்போது நாட்டில் காய்கறிகளின் விலையில் காணப்படும் நிச்சயமற்ற நிலை வரும் ஜூன் அல்லது ஜூலை மாதவாக்கில் சீரடையும் என உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு நம்பிக்கை கொண்டுள்ளது.

காய்கறிகளின் விநியோகம் விரைவில் நிலைத்தன்மை பெறும் என்று அந்த உணவுப் பொருள் உற்பத்தியாளர்களும் விநியோகிப்பாளர்களும் உறுதியளித்துள்ளதாக அதன் துணையமைச்சர் டத்தோ ரோசோல் வாஹிட் கூறினார்.

பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றம் தற்காலிகமானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக ஆஸ்ட்ரோ அவானி தெரிவித்தது.

காய்கறிகளின் விலையில் நிலையற்றப் போக்கு நிலவுவதற்கு பருவ நிலை மாற்றம், பயிர்களுக்கு ஏற்பட்ட நோய்த் தாக்குதல் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்றவை முக்கிய காரணங்களாக விளங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

காய்கறிகளின் விலையேற்றம் தொடர்பில் நாங்கள் புகார்களைப் பெற்றுள்ளோம். பருவ காலத்தைப் பொறுத்து இந்த விலையேற்றம் நீண்ட காலத்திற்கு நீடிக்காது என்பதை கடந்த கால அனுபவங்கள் எங்களுக்கு உணர்த்தியுள்ளன என்றார் அவர்.

ஆகவே, காய்கறிகளின் விலை ஒன்று அல்லது இரண்டு மாத காலத்திற்கு உயர்வு காணும். பிறகு அதன் விலை கடுமையாக வீழ்ச்சி காணும். எனினும், நிலைமையை நாங்கள் அணுக்கமாக கண்காணித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அளவுக்கு காய்கறிகளின் விலை உயர்த்தப்படுவதை தடுப்பதற்காக மார்க்கெட்டுகள், பொது சந்தைகள், பேரங்காடிகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் தமது அமைச்சு கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :