ECONOMYNATIONAL

இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற விருதளிப்பு நிகழ்வுக்கு மாமன்னர் தலைமையேற்றார்

கோலாலம்பூர், ஜூன் 6– இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெற்ற உயரிய விருதுகள் மற்றும் பட்டங்கள் வழங்கும் நிகழ்வுக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா தலைமையேற்றார்.

மாமன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில் பேரரசியார் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவும் கலந்து கொண்டார்.

இஸ்தானா நெகாராவுக்கு வருகை புரிந்த பேரரசர் தம்பதியரை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ முஹாய்னி ஜைனால் அபிடின் ஆகியோர் வரவேற்றனர்.

மாமன்னர் தம்பதியர் பின்னர் பிரதான மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவருக்கு அரச மரியாதை வழங்கப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதன் பின்னர் யாங் டி பெர்த்துவான் அகோங் தேசிய கொடி ஏற்றப்பட்டு 21 மரியாதை குண்டுகள் முழங்கப்பட்டன.

அங்கு நடத்தப்பட்ட மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்ட மாமன்னர், இரண்டாவது அரச மரியாதையை ஏற்றுக் கொண்டார். மீண்டும் ஒரு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

அல்-சுல்தான் அவர்கள் மேடையிலிருந்து இறங்கி விருதளிப்பு நிகழ்வு நடைபெறும் ஸ்ரீ மகாராஜா அரங்கிற்கு சென்றார். பேரரசரின் அதிகாரப்பூர்வ பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆறு அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆறு நிகழ்வுகளும் ஜூன் 2 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை நடைபெறும்.

இம்முறை மாமன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு 1,021 பிரமுகர்கள் கூட்டரசு அரசின் விருதுகள், பட்டங்கள் மற்றும் பதக்கங்களைப் பெறுகின்றனர்.


Pengarang :