ECONOMYNATIONAL

மீன் விநியோகத்தில் இடைத் தரகர்கள் ஆதிக்கம்- அரசு தீர்வு காண அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், ஜூன் 8– நாட்டில் மீன் விநியோகத் சங்கிலித் தொடரில் உள்ள இடைத் தரகர்கள் ஆதிக்கப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான வழி வகைகளை அரசாங்கம் ஆராய வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இடைத் தரகர்களின் தலையீடு காரணமாக நாட்டில் மீன் மற்றும் மீன் சார்ந்த உணவுப் பொருள்களின் விநியோகம் மற்றும் விலையில் நிலைத்தன்மையற்றப் போக்கு நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவருமான அவர் சொன்னார்.

இது மிகவும் வேதனையளிக்கும் விஷயமாகும். இதனால் மீனவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் சம்பந்தப்பட்ட அமைச்சின் வாயிலாக தனது  நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்பதோடு தீர்வுக்கான வழியையும் ஆராய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இடைத் தரகர்கள் மீன்பிடித் தொழிலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் மீனவர்களுக்கு தொடர்ந்து நெருக்குதல் தருவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.


Pengarang :