ECONOMYNATIONAL

கிள்ளானில் டீசல் மோசடி நடவடிக்கை முறியடிப்பு- 55,200 லிட்டர் எரிபொருள் பறிமுதல்

ஷா ஆலம், ஜூன் 9- உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் கிள்ளானிலுள்ள சேமிப்பு கிடங்கில் நேற்று மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் டீசல் மோடியில் ஈடுபட்ட கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.

இந்நடவடிக்கையின் போது உதவித் தொகை வழங்கப்பட்ட 55,200 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டதாக அமைச்சின் சிலாங்கூர் மாநில அமலாக்கத் துறை இயக்குநர் அஸ்மான் ஆடாம் கூறினார்.

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த அந்த கிடங்கிலிருந்து தலா 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட எட்டு கொள்கலன்கள், நான்கு  லோரிகள் மற்றும் டீசலை நிரப்புவதற்கு பயன்படும் உபகரணங்கள் ஆகியவற்றை தாங்கள் கைப்பற்றியதாக அவர் சொன்னார்.

எண்ணெய் நிலையங்களிலிருந்து லோரிகள் மூலம் டீசலை வாங்கி அதனை விநியோகிப்பதற்கும் சேமித்து வைப்பதற்கும் இந்த கிடங்கு பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கையின் போது லோரிகள், டீசல் டாங்கிகள் உள்பட 605,000 வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையின் போது 25 முதல் 41 வயது வரையிலான மூன்று இந்திய ஆடவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

விசாரணைக்காக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டப் பின்னர் அவர்கள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்றார் அவர்.


Pengarang :