ANTARABANGSAECONOMY

வாழ்க்கைச் செலவின நெருக்கடியை உலகம் ஒரு தலைமுறைக்கு எதிர்நோக்கும்- ஐ.நா. கூறுகிறது

நியு யார்க், ஜூன் 9- வரலாறு காணாத வாழ்க்கைச் செலவின நெருக்கடியை உலகம் குறைந்த பட்சம் ஒரு தலைமுறைக்கு எதிர்நோக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலை ஏற்படுவதற்கு உக்ரேன் நெருக்கடியும் ஒரு காரணமாக விளங்குவதாக ஐ.நா.வின் அறிக்கை ஒன்று கூறியது.

இருபத்தோராம் நூற்றாண்டில் மிகக் கடுமையான வாழ்க்கைச் செலவின நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது. மக்களும் உலக நாடுகளும் அதனை எதிர்கொள்வதற்குரிய குறைந்த பட்ச ஆற்றலை மட்டுமே கொண்டுள்ளனர் என்று உக்ரேன் பூசல் மீதான உணவு, எரிசக்தி, நிதிக்கான உலக நெருக்கடி பதிலளிப்பு குழு வெளியிட்ட இரண்டாவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேன் நெருக்கடி உலக மக்களை பாறைகளுக்கும் கடினமான இடத்திற்கும் இடையே சிக்க வைத்துள்ளது. பாறை என்பது உணவு, சரிசக்தி, உரச்சந்தைகளில் காணப்படும் அதிர்ச்சியூட்டும் விலையேற்றமாகும். இச்சந்தைகள் ரஷியா மற்றும் உக்ரேனை மையம் கொண்டுள்ளன.

கடினமான இடம் என்பது இந்த நெருக்கடி ஏற்படுத்திய கடினமான சூழல், கோவிட்-19 நோய்த் தொற்று மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவையாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஷின் ஹூவா செய்தி நிறுவனம் கூறியது.

அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் மற்றும் வளரும் முதலீட்டாளர்களின் நிச்சயமற்ற சூழல் ஆகியவை மேம்பாடு காணும் நாடுகளின் நாணய மதிப்பையும் கடன் வாங்கும் ஆற்றலையும் கடுமையாகப் பாதித்து விட்டன.

எரிசக்தியின் அபரிமித விலை உயர்வு, குறிப்பாக டீசல், இயற்கை எரிவாயு விலையேற்றம் உரம் மற்றும் போக்குவரத்து செலவுகளை அதிகரிக்கச் செய்கின்றன. இந்த காரணங்களால் உணவு உற்பத்தி செலவும் அதிகரிக்கிறது. இதனால் விளைச்சல் குறைந்து உணவுப் பொருள்களின் விலை உயர்வு காணும் சூழல் ஏற்படுகிறது என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது.


Pengarang :