ECONOMYSELANGOR

கைவிடப்பட்ட வாகனப் பிரச்னைக்குத் தீர்வு காண புதிய கொள்கை- எம்.பி.பி.ஜே. அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 10– வாகனங்கள் கண்ட இடங்களில்  கைவிடப்படும் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான விஷேச கொள்கையை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் விரைவில் வெளியிடும்.

அத்தகைய வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு போதுமான இடங்கள் இல்லாளிருப்பதை கருத்தில் கொண்டு இந்த கொள்கை வரையப்படுவதாக மாநகர் மன்ற துணை டத்தோ பண்டார் ஷரிபா மர்ஹானி சைட் அலி கூறினார்.

குறிப்பிட்ட சில வழி முறைகளைப் பயன்படுத்தி கைவிடப்பட்ட வாகனங்களை சொத்துகளாக மாற்றுவதை இந்த கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இவ்விவகாரம் தொடர்பில் நாங்கள் சாலை போக்குவரத்து இலாகா மற்றும் தரை பொது போக்குவரத்து ஆணையத்துடன் தற்போது பேச்சு நடத்தி வருகிறோம். இன்னும் சில மாதங்களில் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து இதன் தொடர்பான கொள்கை வெளியிடப்படும் என்று  அவர் தெரிவித்தார்.

இங்குள்ள கேலரியா பிஜே ஈக்கோ மறுசுழற்சி மையத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான பெட்டாலிங் ஜெயா மாவட்ட நிலையிலான சுற்றுச் சூழல் தினத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மலிவு விலை வீடமைப்புப் பகுதிகளில் அதிகமாக கார்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அவர் சொன்னார்.

இத்தகைய கைவிடப்பட்ட வாகனங்களால் வாகன நிறுத்துமிடப் பற்றாக்குறை ஏற்படுவதோடு போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :