ECONOMYNATIONAL

கொடி அணிவகுப்பு நிகழ்வில் மாமன்னர் தம்பதியர் பங்கேற்பு

புத்ராஜெயா, ஜூன் 10– இங்குள்ள வீரர்கள் சதுக்கத்தில் இன்று காலை நடைபெற்ற யாங் டி பெர்துவான் அகோங் கொடி மரியாதை அணிவகுப்பில் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா  மற்றும் பேரரசியார் துவாங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியா தம்பதியர் கலந்து கொண்டனர்.

மேன்மை தங்கிய பேரரசரின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

காலை 8.30 மணியளவில் பேரரசர் தம்பதியர் வீரர்கள் சதுக்கம் வந்தடைந்தனர். அரச மலேசிய ஆயுதப்படைகள் இசைக்குழுவின் வாத்திய இசையோடு அவர்கள் வரவேற்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தேசிய கொடி, மலேசிய ஆயுதப்படைகளின் கொடி, அரச மலேசிய ஆகாயப்படை கொடி, அரச மலேசிய கடற்படைக் கொடி, அரச மலேசிய தரைப்படைக் கொடி ஆகியவற்றை ஏந்திய ஐந்து விமானங்கள் வானில் வட்டமிட்டன.

இந்நிகழ்வுக்கு இடையே, 41வது இராணுவத் தளவாடப் பட்டாளத்தின் வீரர்கள் 21 பீரங்கி குண்டு முழங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து முப்படைகளையும் சேர்ந்த 57 அதிகாரிகள் மற்றும் 847 வீரர்கள் பங்கு கொண்ட மரியாதை அணிவகுப்பையும் மாமன்னர் பார்வையிட்டார்.


Pengarang :