ECONOMYNATIONAL

கட்டாய மரண தண்டனையை அகற்ற அரசாங்கம் இணக்கம்

கோலாலம்பூர், ஜூன் 10– நாட்டில் கட்டாய மரண தண்டனையை அகற்றி அதற்கு பதிலாக நீதிமன்றத்தின் விவேகத்திற்குப்பட்டு இதர  தண்டனைகளை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

கட்டாய மரண தண்டனைக்கு மாற்று தண்டனையை வழங்குவது தொடர்பான அறிக்கையை தாம் கடந்த புதன் கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்ட விவகாரம்) டத்தோஸ்ரீ வான் ஜுனைடி வான் ஜாபர் கூறினார்.

அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ள கட்டாய மரண தண்டனைக்கு மாற்றாக வழங்கப்படும் தண்டனைகள் குறித்த சிறப்புக் குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டதோடு கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் தலைமை நீதிபதி துன் ரிச்சர்ட் மலான்ஜோங் தலைமையிலான அந்த  குழுவில் சட்ட வல்லுநர்கள், முன்னாள் மலாயா தலைமை நீதிபதி, முன்னாள் சட்டத் துறைத் தலைவர், சட்ட விரிவுரையாளர் மற்றும் குற்றவியல் நிபுணர் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

இது தவிர, 11 குற்றங்களுக்கு வழங்கப்படும் கட்டாய மரண தண்டனைக்கு மாற்றாக வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தண்டனைகள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொள்ளவும் அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது என அவர் சொன்னார்.

இந்த ஆய்வு சட்டத்துறை தலைவர் அலுவலகம், பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு, தொடர்புடைய இதர அமைச்சுகள் மற்றும் துறைகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.


Pengarang :