ECONOMYNATIONAL

கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வதற்கான காலநேரம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை – அமைச்சர்

கூச்சிங், ஜூன் 11– கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வதற்கான காலநேரத்தை அரசாங்கம் இன்னும் நிர்ணயம் செய்யவில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) டத்தோஸ்ரீ வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் தெரிவித்தார்.

ஏற்கனவே நீதிமன்றத்தில் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை ஆய்வு செய்ய ஒரு தீர்ப்பாயம் அமைக்கும் முன்மொழிவு உட்பட முன்னதாக அதிகமான அம்சங்கள் ஆராயப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

“அரசியலமைப்பின் அடிப்படையில், இதை ஏஜி (அட்டார்னி ஜெனரல்) தரப்பும் (மேலும்) எனது அமைச்சகமும் ஆராய வேண்டும், ஏனெனில் இது அரசியலமைப்பிற்கு முரணாக இருந்தால், அதை செயல்படுத்த முடியாது,” என்று வான் ஜுனைடி இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வதற்கும், நீதிபதிகளுக்கு தண்டனை வழங்குவதில் விருப்புரிமையை வழங்குவதற்கும் அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக முன்னர் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் அவர் விரிவாகக் கூறினார்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கட்டாய மரண தண்டனைக்கான மாற்று தண்டனைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக அந்த அறிக்கையில் வான் ஜுனைடி கூறினார்.

கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வதுடன், மரண தண்டனை அல்லது வேறு ஏதேனும் தண்டனை வழங்குவதை நீதிபதிகளின் விருப்பத்திற்கே விட்டு விடுகிறோம்” என்று அவர் கூறினார்.


Pengarang :