ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சொக்சோ சந்தா செலுத்தத் தவறிய- 1,124 முதலாளிகள் மீது நடவடிக்கை

தாப்பா, ஜூன் 12- தங்கள் ஊழியர்களுக்கு சொக்சோ சந்தாவை செலுத்த தவறிய குற்றத்திற்காக அந்த சமூக பாதுகாப்பு நிறுவனம் 1,124 முதலாளிகளுக்கு எதிராக குற்றப்பதிவுகளை வெளியிட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை தொடங்கப்பட்ட ஓப்ஸ் கெசான் நடவடிக்கையின் வாயிலாக 5,479 முதலாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொக்சோ தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜிஸ் கூறினார்.

அவர்களில் 833 பேர் மீது 1963 ஆம் ஆண்டு சமூக பாதுகாப்பு நிறுவனச் சட்டத்தின் கீழும் 291 பேர் மீது 2017 ஆம் ஆண்டு தொழிலாளர் காப்புறுதி முறை சட்டத்தின் கீழும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

இந்த சோதனையின் போது சுமார் இருபது விழுக்காட்டு முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களை சொக்சோவில் பதிவு செய்யாததோடு சந்தாவும் செலுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டது என்றார் அவர்.

ஊழியர்களின் நலன் கருதி அவர்களை சொக்சோவில் பதிந்து அவர்களுக்கான சந்தா தொகை முறையாக செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக  நாடு முழுவதும் முதலாளிகளிடம் சோதனை செய்யும் நடவடிக்கையை தாங்கள் தீவிரப்படுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் இங்குள்ள இளைஞர் மற்றும் விளையாட்டு மையத்தில் நடைபெற்ற பேராக் மாநில நிலையிலான 2022 மலேசிய குடும்ப வேலை வாய்ப்புத் திட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.


Pengarang :